Thursday, December 22, 2016

திருவஞ்சிக்களம் :

வஞ்சிக்களம் :

இருள்தருமா ஞாலத்து இகலொழித்தல் வேண்டுவயேல் 
மருளொழித்து மடநெஞ்சே வஞ்சிக் களத்துறையும்
அருளாழி மணிவண்ணர் கண்ணன் எம்பெருமான்
திருவாளன் திண்கழல் துணையாதல் தேடுவயே. 

தேட்டம் திருமால் தொண்டர்தம் கூட்டத்து ஈட்டம்
வாட்டமில் பெரியாற் றின்பால் வஞ்சிக் களமதன்மேல்
நாட்டம் நாளும் எனக்கு கொடுங்கலூர் மாதவன்
பாட்டாயா தமிழ்மாலை பாடிப் புகழ்வன் அவனையே .

மெய்யாம்  மறையை மறைவாழ் திருவை
செய்புரள் பெரியாற்றின் வடபால் வஞ்சிக்களம்
எய்திவைகும் மாதவன்தன் கோயில் நண்ணி  
உய்யகதி  ஓம்புவார் உற்றார் எனக்கவர்  ஆவரே .

ஊனேய் குதம்பைஉயிர் வாடவாடும்
வானேய் வண்கையார் வஞ்சிக்களத்து 
மானேய்மடப் பின்னைதன் மாதவற்கு
யானேகி ஓர்நாள் வினையாவும் ஓய்வனே.

தருவாய்நீ  மாவலி மூவடி என்றேகி
ஒருகால் காட்டி மறுகால் அளந்த
பெருமான் புகுதவிடம் திருவஞ் சிக்களம்
சிரமேலது செறிய மென்குழலாள் நோக்கு.

ஏர்முன் நடப்ப பார்பின் செல்லும்
வேர்முன் எழுமது இவ்வுலகில் தொட்டனைத்
தூரும் கழனிப் பழவயல்திரு வஞ்சிக்களம்
நேர்முன் நடப்பார் பாங்காய பத்தரே. 

ஆலின் மேலான் அலைகடல் துயின்றான்
பாலின் பிறந்த பதுமத்தாள் தாம்வரும்பும் 
நூலின் மேலோன் நுவன்றுறையும் வஞ்சிக்களம்
கோலிக் குறுகுவார் வானோர்நல் விருந்து.

மன்னன் குலசேகரன் நாளும் நினைந்து நைந்து
தென்னரங்கம் திசைநோக்கி நாடிமேவல் விழைவான்
என்னுடைய இன்னமுதர் காணலின்று நாளையாக
என்னோ? ஏழைக்கு இரங்கும் வஞ்சிக் களத்தானே.

விஞ்சை வானவர் தஞ்ச மானவன்
மஞ்சுமா மழைபொழி வஞ்சிக்களம்
கொஞ்சிப் பரவி கூத்தாடு மடியார்
நெஞ்சில் போதவன் வந்தமை ஏத்துவனே.

அங்கண் இரண்டும் அடியார்க்கு அருள்சேர்ப்ப
தெங்கும் பலவுதூங்கு தென்நாட்டு வஞ்சிக்களம்
பொங்கும் பரிவாலே மன்னியெங்கள் மாதவன்
செங்கோல் ஆட்சி செய்வனாம் அவிவின்றி.

வண்டமர் சோலை வளம்பொழில் நகரான் 
தொண்டன் குலசேகரன் தாம்வந்து தோன்றியஊர்
அண்ட வாணன் ஆள்கின்ற வஞ்சிக்களம்
கண்டேத்த வல்லார் தொண்டாள்வர் விண்ணூடே .

--கி.ஶ்ரீ. ஶ்ரீ.


Tuesday, December 13, 2016

கீதா வசனம்

உற்று மோந்து கண்டு கேட்டு சுவைத்து
பற்று விளைக்கும் ஐம்பலன் கண்ட இன்பம்
துற்ற மெய்மூக்கு கண்காது நாக்கிவை மேல்உயிர்
முற்ற உண்டாம் அவைவீயப் பெற்றவன் தாள்பற்று

(ஞாநேந்திரியம், கர்மேந்திரியம், மனம் இவைகளின் கூட்டறவே கிரியை. இந்த கிரியை பாபத்திலோ, புண்யத்திலோ சேர புத்தி காரணமாகிறது. புத்திதான் உயிரின் வெளிப்பாடு. அதன் நோக்கும், போக்கும் ஊழின் (முன்வினைப்) படி அமைந்தால் ஸ்வதந்ரியத்தின் - அஹங்காரத்தின் பரிணாமம். பகவத் அபிமுகராய் அவனின் ஆநுகூல்ய சங்கல்ப மடியாய் அமைந்தால் அது பிராதிகூல்ய வர்ஜனம். தளை நீங்கி தாள் சேர்க்கும்).




Wednesday, November 30, 2016

கிருஷ்ணாயனம் :

கிருஷ்ணாயனம் :

கிருஷ்ணாயனம் மயா புரோக்த்தம் கிருஷ்ணஸ்ய கிருஷ்ணார்ப்பணம் |
ஸ்ரீகிருஷ்ண திவ்யாஸ்பதம் பவது கிருஷ்ணா நுகம்பாத் ஸ்மரம் ||

மண்ணின் பாரம் முடிக்க, சாது ஜனங்களைக் காக்க,
விண்ணினின்றும் பிறந்தான் தேவகிதன் மகனாய்,
கண்ணன் எனவளர்ந்தான் கோகுலத்தில் இருந்தான்,
அண்ணன் பலராமனுடனே யசோதை தன்சுதனாய்.

வந்தவசுரரைர்க் கொன்றான், கோபியர் அஞ்சி அதிசயிப்பான் ,
இந்திரன் தந்தமழையை குன்றமெடுத்து குடையாய்த் தடுத்தான்,
கந்தர்வ குமாரர் இருவர் ஆங்கு மரமாய் நிற்ற சாபம் தீர்த்தான் ,
மந்த யமுனை காளிந்தியில் காளியன்தலை நடம் பயின்றான்.

வனஜைசேர் பிரமன் பிள்ளைகள் ஒளிப்ப தோற்பித்தான்,
தனிமையிலே முழுநிலவில் பெண்கள் மனதை ஓர்ப்பித்தான்,
இனிமையிலே குழலூதி கன்று மாடுகளை சேர்ப்பித்தான்,
முனிபத்னிகள் திறம்காட்டி முனிவரவர் நேர்ப்பித்தான்.

மிக்கப்பெரும் மண்பாண்டத்து ததிபாண்டர்க்கு வீடளித்தான்
அக்கையில் சக்கரம் காட்டி நாவல்பழம் நேர்கொண்டான்,
தக்கத்தன்று எனதடுத்தும் இல்லம்புக்கு வெண்ணை உண்டான்,
மிக்கப்பெரும் வீதிநடுவே குடமாட்டு நடம் புரிந்தான்.

அக்குரூரவர் கனவு மெய்ப்பித்தான், மதுரைத் தடம்புக்கான்,
தக்கதென தன்கழுத்துக்கு உற்றமாலைப் பெற்றுகந்தான்,
அக்கூனி அதிசயிப்ப அவள்கோணல் போக்கி சாந்தணிந்தான்,
விக்கிரமங்கள் பலசெய்து தம்மக்கள் மனத்தமர்ந்தான்.

யானைமுன் நிறுத்தி மல்லரை மடுத்த கம்சனை வதைத்தான்,
ஏனைய சாகசம் அனைத்தும் தேவகிக்கு பின்நடத்தி மகிழ்த்தான்,
தானைப் பரிவாரம் திகழக் கிடப்ப உக்ரசேனன் மீட்டான்,
மானேய் மடநோக்கி பின்னை மணாளன் மாயம் இவையோதாம்?

பின்னை உருப்பிணி மணந்தான், பாமையை கொணர்ந்தான்,
தன்னை நலிந்த அபவாதம் ஒழிந்தான், ஜாம்பவதி புணர்ந்தான்,
இன்னும் பதினாறாம் ஆயிரம் தேவ கன்னியர் மீட்பனாய்
துன்னுபகை நரகனை வதைத்து இந்திரனைக் காத்தான்.

காத்தலும், அவன்மனைப் பூத்த கற்பகக் காவுதனை
நித்தமும் தன்மனைப் பூக்க வேண்டி நிச்சிது இச்சித்தாள்
சத்ய பாமையுமே, அதுநீடா வெகுண்ட இந்திரனும்
அத்திரம் கொண்டேக செருகறுந்தான் கண்ணனுமே!

உலப்பில் அரக்கன் கம்சனவன் மாவன் எண்ணாது
குலப்பெண் இருவரவர் நூலிழப்ப நொந்து கண்ணன்பால்
பலகாலும் படையெடுத்து இன்னல்பல விளைப்ப, பின்னும்
நலியாவகை நாடுவிட்டு ஒடி துவராபதி கண்டான்.

அக்ரபூஜை நேர்வது யார்க்கென சான்றோர் மொழிய
மூர்க்கன் சிசுபாலன் பொல்லாங்கு பேசி வசைபொழிந்தான்,
தீக்கொள் சக்கரம் அதுகொண்டு அவன்தலையை ஆங்கே
போக்கிய நம்கண்ணன் அல்லாதோர் இல்லை கண்ணே.

துரியன் விருப்பால் அகம்புகுந்து துருவாசர் பாரணம் கோர
சூரியன் தந்த கலயத்து அடிசில் இன்னும் வாராது என்றுணர்ந்த
நாரியவள் பாஞ்சாலி கூவியழைத்த குரலுக்கு ஓடிப்போந்தான்
ஓரத்து கீரை வாயிலிட்டு முனிவர் வயிறு பூரித்து ஓடச்செய்தான்.

குந்திதன் புதல்வர் சொந்தமாய் தூது முந்தி நடந்தான்,
வந்த எதிர்தல் அத்தனையும் அண்டாது கொண்டான்,
இந்த அத்தனையும் பாஞ்சாலி குழல்முடிப்பச் செய்தான்,
தந்தஅவள் பக்திக்கு ஈடுஇவை ஏதுமிலை எனநொந்தான்.

தேர்நடத்தி தேர்அழுத்தி தேர்விடுத்து போர்களத்து பேரளித்தான்
பார்த்தன் போல்வில் விஜயன்யார் என்றுஊர் பேச, நம்கண்ணன்
போர்முகத்து பாண்டவர்க்காய் கூர்த்தப்பட்டை ஏந்தலேன் என்ற
சீர்த்ததன் வாக்கு பொய்த்தனாய் பொல்லாங்கு தான்நேர்ந்தான்.

சூதுவாது பலசெய்து சுயோதனர் பத்தும்பத்தாய் மாய்த்தான்,
கீதை உரைசெய்தவன் அவனே உத்தரை மகனைக் காத்தான்,
மாதவன் தன்பெருமை பீஷ்மர் அவர்வாயில் மொழியதைத் தானும்
யாதுமறியா பேதை அதுவேபோல் ஆவல் மிகக் கேட்டான்.

கண்ணன் கள்ளம் கண்டு உத்தவர் சுத்தி வளையாதே எத்திறம் என்ன
கண்ணைப் புரட்டிக் கடத்த மேலுமொரு கீதை மொழிந்தான் பின்னை.
அண்ணல் அவனியில் வந்து தோன்றி தன்எண்ணம் எல்லாம் முடித்து
விண்ணில் மீளப்புக்கான் முன்னம் வாலி வேடன் கைஅம்பு தைய்த்து!

துவரையம் பதியும் கடல் போக, பாண்டவர்
ஐவர்தாம் ஈட்டிய அறத்தின்பால் சுவர்க்கம் ஏற ,
அவனியில் யாதவர் குலம் நசியக் கண்டனாய்
எவன் இவைச்செய்வான் அவனும் மீண்டனனே!

தன்னுடைச் சோதியுள் தேம்பாதே சென்று நாட்டில்
தன்னுடைக் கீதைமொழிப் பாதை ஈட்டிய மாட்டு
நன்நெறியை மீள மனிசர் உய்யக் காட்டுமாறு
மன்னுலகில் ஆழ்வார் போல்வாரைக் கூட்டினனே!

மங்களம் கண்ணனுக்கு, மரகத வண்ணனுக்கு,
மங்களம் மாலுக்கு, மாயனார் தாளுக்கு,
நங்கள் நாயக்கர்க்கு திருநிறை வாசன்சொன்ன,
மங்களம் எங்கணும், யாவர்க்கும் தங்கவே!

--கி. ஸ்ரீ. ஸ்ரீ.

Monday, September 26, 2016

ஆசுகவி 2

முகநூல் மலர்ந்த ஆசுகவி 2

151. பகு குடும்பி :   

பிள்ளை செலுவத் திருநா ரணன்போலா  
தெள்ளு தமிழ்க்கோதைக் கண்ணர் ! -- ஒள்ளிய
போதத் தெதிராசர்க் கோர்மருகன் உண்டதாய்
கோதில் குருமார் அவர்!


பொத்தேரி ஶ்ரீ வேணுகோபாலன் திருக்கல்யாணம்

குழலூதும் கண்ணனுக்கு கோலா கலமாய்
பழவேத பாங்கான கல்யாணம் ! -- சூழ
வரலால் சுவைநல்ல வாக்கும் வரமும்
பெறுவார் அவையத் திருந்து.

ராமாஞ்சநேயர்

குரக்கென தாம்விலக் கில்லை அவர்க்குடை
மாருதி பக்தி எவருடையார்? -- மாறன்
ஒருவர் அவர்உளராய் மாலுக்கு ஆமே
மறவா தவர்தாள் பிடித்து.

நம்பி நாரணன், (கிருஷ்ணன் கோயில்) மல்லேஸ்வரம்.

நம்பி திருநா ரணன்தாள் சரணே சரண்என
நம்பி வருவார்! உருப்பிணி -- கூம்பி
விழுவார் அவர்தாள்! வழுவா வகையே
தொழுவா ரவர்எம் தலை!

அங்கப் பிரபத்தி.

இணங்கல் தடைவிலக்கல் தாள்சேர்ந்த பின்னும்
சுணங்கா திடவிசு வாசம் -- வணங்கலன்றி
ஒன்றும் இயற்றலா கைமுதல் இன்மைதம்
புன்மை அடைக்கலம்சேர் ஐந்து!

இராமாயணம் வந்த வரத்து.

நடத்தியவன் கேட்டான் அவன்பெற் றவர்சொல்ல!
ஏடு படுத்தி பயிற்றினார் -- ஆடரவின்
புற்றில் பிறந்தாராய் நாடி நமக்குரைத்தார்
கொற்றக் குலசே கரன்!

வாமன ஜெயந்தி.

சிறுகன் இவன்எனக் கீழ்மை மொழியேல்!
பெருகி உலகமளந் தானால்! -- இருபால்
நெடுகி நிலம்கொண்ட எந்தை! ஒருபால்
அடுகி அலம்எனா தீட்டு!

மெல்பேர்ண் வேங்கட வரதன்.

வேங்கட எம்வரத கோவிந்தா! யாங்கணும்
பாங்கினில் சேவை கொளவருளும் -- மங்கள
தேவா! மலர்மகள் நாதா! திறம்பாது
மேவாய் மறவேன் மனத்து!

ஆண்டாள் சொப்நம்.

கனவில் இனியான் நினைவில் வருமேல் 
மனதில் துணிப மணமே -- புனைவேன்!
எனையாள் இறைவா! இமையோர் தலைவா!
உனையான் பிரியா திருப்பு!

பார்த்தசாரதி, திருவல்லிக்கேணி.

ஆர்த்தன் அடியேன் அடிபணிந்தேன்! நோலாது
தீர்த்தன் திருவடிக்கே சேர்ந்தனாய்! -- பார்த்தன்
பணிந்து பகைவரை போர்முகது வீழ்த்த
இணையடிக்கே தாழ்த்தி இருந்து.

161. அந்தர்வாஹிநி :

மாசு அடைந்த மனம்பாழ் அடைந்தவீடு!
தூசு துடைத்து அதில்தூய -- தேசு
மிளிர்வுற கேசவா என்றோதும் நாக்கு
விளக்கதை ஏற்றும் திரி.

கைவிளக்கு :

இருளில் விளக்கு இலையேல்நம் கண்ணால்
பொருளில்லை. அஃதே அறிவால் -- பொருளில்லை
பக்தியாம் கைவிளக்கு காட்டும் கடவுள்தன்
யுக்திகொடு மெய்விளங்கல்  விட்டு!

கடற்கரை வார்த்தை :

தேவை இடாதவர் தம்கருணை தான்பெரிதோ ?
யாவையும் விட்டு எனைப்பற்று! -- தேவை
இதுஎனச் சொன்னஅக் கண்ணன் கொலோ?அவ்
எதிராசர் உண்டாய் நமக்கு!

கஜேந்திர மோட்சம்.

பூக்கொடு  கூவி களிறு அழைப்பஅக்
கூக்குரல் கேட்டலும் தண்ணளி -- மீக்கொடு
ஓர்பறவை ஊர்ந்துவண் சக்கரக் கையான்அன் 
நீர்புழுவை மாய்பனே பாய்ந்து!

லீலைக்கு விஷயம் கிருபை :

கருணையால் நாம்பிறந்தோம் லீலையால் இங்குழல்வோம்!
யாரெமை மீட்ப்பார் எனக்கேட்ப்பார்ச் -- சேரும்
வகையே அவன்தாள் இருக்க பிறன்பால்
உவகை விடுத்தார் முடித்து!

நவராத்ரி இரட்டைப் புறப்பாடு :

கச்சிக் கிறைகாஞ்சி தேவாதி ராஜனுடன்
மெச்சி உலகுய்ய வாஞ்சையுடன் -- உச்சிமலை
வேங்கடவன் மாதம் நவராத்ரி சேர்த்திகாணல்
நாம்கடவா வண்ணமே நல்கு!

அகரம் :

செடியாய வல்வினைகள் தீர்திரு மாலை!
அடியேன் அகரத்துள் காண்டலும் -- தேடித்
திருவா திரைநாள் அமைவதே! அம்மால்
மறவா திருந்த பயன்.

ராம(அ )காரம் :

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நான்உளேன் என்றுணர்த்த
வில்லேந்தி வெல்தவத்த வேந்தர்தம் -- சொல்லேற்று
கல்லதர் காடுறையப் போனார் அவனருள்
அல்லது அல்ல அருள்.!

அம்மை அலாதாள் அரசன் அழப்பெற்ற
அம்மா அரும்வரம் ஆய்ந்துகொடு -- அம்மானை
அல்லா அடவி அணைவிப்பாள், அவனருள்
அல்லது அல்ல அருள்.!

கண்ணன் தூ(சூ)து :

செய்சூதில் நாடிழக்கக் காடுபோய் மீளலும்
ஐய்யஇப் போது உரியபங்கை -- செய்யகண்ணர்
பொய்த்தூதில் சென்றிரக்க நீடா விதுரன்தோள்
பொய்ப்பதாச் செய்தமாயம் ஈது .

171. நவராத்ரி நாயகி - ஸ்ரீ ரங்க நாச்சியார் :

சாய்கொண்டை யும்தாழ் வடமும் அரையில்வெண்
தோய்பால் நிறத்துப்பட் டாடையும் - கையில்பொன்
அஞ்சுகமும் தண்டையும் தாளிணையும் நன்றுஎன்
நெஞ்சகலா நின்றன வே!


கிமர்த்தம் நபூஷிதம் பூஷிதார்ஹாஹ:

சரம்சரமாய் மாலைகள் சாத்தாமல் ஒற்றைச்
சரம்ஹார மாய்உன் அழகு -- சிறப்பது
காணில் வெறும்புலத்தில் ஆரதி தான்வழிக்கத்
தோணும்!மேல் ஆபரணம் பூட்டு.

பஸ்யதோ ஹரத்வம் :

பாபமே செய்து பழகினேனை தேவாநீ
கோபமே நோக்காய் விழித்தியென்?-- காவா
உனது அகலவிழி முன்னே அகம்அனைத்தும்
போனது செய்வாள் திரு!

மலையப்பன் :

மலைஏழும் ஏறி வணங்க வினையாம்
மலைபோம் தலைமுறை ஏழேழும் -- மேலை
ஒருஏழும் வாழும் படியாகும் முன்னோர்
பெருஞ்செல்வம் பின்னோர்க்காம் ஆங்கு.

திருவைத் தேடி திருமால் இரும்தவம்
சேரும் திருமலை ஈது! -- நீருமல்ல
யாரும் எவரும் இருவரவர் நாடியின்றே
வாரும்! பெறுவீறாம் பேறு!

கண்ணன் வாக்கும் வழியும் :

கண்ணன்தாம் சொன்னவை நம்கடப் பாடு!பின்
கண்ணன்தான் செய்தன கள்வமாய் -- மண்ணவர்
செய்வதொண்ணாம் மாய மயக்கு வயப்படா
உய்வ துளவோ உலகு?

நாமப் பிரபாவம் :

"ராம" யெனும்நாமம் நாவினில் ஓவலும்
சேமம் உமதாகும் இங்குபோல் -- ஏமத்
துறுபெரிய வான்போகம் நல்கப் பெறுமாங்கு!
யாரும் ஆகார் தடை!

பேயாழ்வார் மங்களாசாசனம் :

பயில இனிய தமிழ்ப்பாடல் நூறும்
மயிலைத் தமிழ்த்தலைவன் பாடி -- ஒயிலாய்
அயல்வாழ் இறையை அணிஅல்லிக் கேணி
வயப்பட் டிரைஞ்சுவன் காண்டு!

செவ்வாய்க் கிளி :

பச்சைமா மேனி பவளச்செவ் வாய்கமலத்
தச்சு கழுத்துகால் இக்கிளி --அச்சுதன்
ஆள்அரங்கன் ஒக்குமால் ! அவ்வரங்கர் தோள்மாலை
ஆள்கின்ற பைங்கிளியோ தாம்?

ஸ்ரீ கிருஷ்ண லீலா - நள கூபுரர் மோக்ஷம் :

வளம்மிக்க பால்தயிர் செய்துறிமேல் வெண்ணை
களவுமிகக் கண்டான் எனத்தாய் -- அளவில்
சிறிய கயிற்றால் உரலில் பிணைத்தாள்
பெரிய மரமிரண்டு வீழ்ந்து!

181. புருஷகாரம் :

மலையப்பன் மாதேவி! மங்கா புரத்தே
தலைப்பெய்து தாளிணைக்கீழ் வேட்ட --அலைமகள்நீ!
அய்யன் திருநிறை வாசன் பெரும்பதத்து
உய்த்து பிரியா திருத்து!

ரங்க ரங்கா :

யானே கடவன் தகவும் உடையேனாம்!
வானே வணங்கும் முடியிது -- காணே
எனவலத்தோர் கையும் பரமபதம் ஈதே
எனஇடக்கை தாள்காட்டும் காண்டு!

கண்ணன் குழலமுதம் :

பின்னைக்காய் முன்னேழ் எறுது அடர்த்தான்தான்
என்னைஇக் கோலம் செயப்புகுந்தான்!-- பின்னைத்
தருவிருந்து ஊது குழல்வாய் மடுத்தாவி 
ஈரும்வகை யாக இசைத்து.

வேதாந்த வாசிரியர் : 

வேழமலை  சூழவந்த வான்முகிலோ? நம்வரதன் 
வாழுமலை தீபகொளும் வெண்மதியோ?  -- ஆழியெழும்
வாய்ந்தபழ நல்முத்தோ? வேங்கட வான்கவி 
வாய்மொழியாம் பூச்செறிவா ணற்கு

முப்புரி ஊட்டிய ஊர் :

முப்புரி யூட்டிய மூதூர் திருக்குருகூர்!
இப்புவி மாட்டு நம் ஆழ்வார்சொல் __ தப்பாது
தான்தோன்றல் முன்தோன் றியநம்பி யைத்தொழப்
பின்தோன்றிய வள்ளல்தம் ஊர்!

உபாயம் ஒருமுறை-உபேயம் எப்போதும் :

பிறவிக் கபயம் திருமால் திருத்தாள் !
மறுகல் இலாஉபாயம்! மற்று -- பெறுகை 
பலகால் அவரடிக்காம் தொண்டு! அலம்என்(று)
வலக்கைக் காட்டும் அழகு!

அங்காண்யங்காணி (சௌந்தர்யம்) :

தாள்சேர்ந்தார் தம்மால் அலதாய்ச் செலும்முழந்
தாள்ஊரு கொப்பூழ் திருத்தடந் -- தோள்கண்டம் 
செவ்வாய் இவையொடு கண்கள் கருணையை
வவ்வல் தடையின்றி மேல்!

அபீதி ஆஸ்வாசம் :

பீதபயம் போர்நடுக்கம் அத்தனையும் ஓயுமால்
நாதன் அபயமென நின்றானால்! -- வேதமயன்
வார்த்தை உளதாக நாடி நலம்காணச்
சேர்மின்நீர் தெய்வம் துணை!

கள்ளழகர் :

மாலிரும் சோலை மலையே! மலைமேல்
பொலியும் திருவே! பலகால் -- வலியத்
தொடரக் கிடந்தாய் அறியா அடியேன்
மடமை மறந்தால் பிழைப்பு !

ஸ்ரீ ரங்க துரியன் :

காவிரி ஆறும் கவிதைசொல் ஊரும்வான்
தாவியிரு கோபுர மும்மதில் -- கோவில்சேர்
கொத்தளமும் அத்தளத்து மேவும் அரங்கனும்
பெற்றுளமால் யார்நேர் எமக்கு?

191. பகவத் ஸ்வரூபம் :

உண்டு இலையென வாதுசெய் வாரிடை 

உண்டென ஆனபோது உண்டவன்  -- அண்ட 
மடங்க நிறைஅருவ மானதோர் மெய்யுரு!
மாடுடைமால் மாயன் திரு!

ஆசாரிய ஸ்வரூபம்:

சுள்ளிக்கால் நட்டு  கொழுகொம்பில் கூட்டியபின்
வள்ளிதான் பந்தலில் மேவுதல்போல் -- மெள்ள
இசைவித்து ஈயாத இன்னருள் தன்னால்
விசும்பேற்றும் ஆரியனைச் சேர்!

உய்ய ஒரேவழி உடையவர் திருவடி :

பிறந்தது பார்த்தன்தேர் முன்னோன் அருளால்!
சிறக்க வளர்ந்தது கச்சிக் -- இறைவன்
பெரும்கருணை அஃதால்! இனிப்பிறவாப் பேறாம்
வரம்கனிவான் அவ்வரங்கன் கொண்டு!

அரங்கன் தென்திசை சயனப்பயன் ?

வடதிசையி னின்றும் இராமன் வழங்க
இடவகை தேர்ந்து வியன்காதல் -- வீடணன்
தன்திசை நோக்கக் கிடத்த அரங்கன்பார்
தென்திசை ஆழ்வார் உதித்து!
அர்ச்சிராதி :

ஒளியைப் பிடித்து வெளியைக் கடந்து
வளிபோய் விரஜை நனைந்து -- தெளிதாம்
விசும்பு திருநாடு சேர முகமன்
இசைப்ப பெருமான் அணைந்து!
சந்யஸ்த்த மோக்ஷ யோகம் :

செய்வானும் செய்வன சேமம்சேர் நல்லறிவு
தெய்வம் துணைநிற்க நாம்கருவி! -- ஐவகை
கூட்டதன் ஓர்முயற்சி நம்வினை நாமல்ல!
வீட்டதன் நற்பயன் மாலுக்கு!

மாநம் பிரதீபமென பரம காருணிகோ ததாதி :
பிறப்பொடு நல்லன தீயன பகுத்தறிய
கூறு கலைபதி நான்கும் -- நெறிநூல்
விளக்கதால் உள்இருள் நீக்கும் மால்உன்
அளப்பில் அருளல்ல தன்று!

மாநம் பிரதீபம் இவ பரமகாருணிகோ ததாதி என்கிற பராசரபட்டரின் ஸ்லோகத்தின் விரிவாக்கம் இந்த பாடல்.
ஸூக்ஷ்ம தசையில் நாம தேச விவஸ்த்திதமின்றி எம்பெருமான் திருவயிற்றில் நாமனைவரும் இருக்க அவனும் தன் சங்கல்ப சக்தியால் முதலில் படைப்பனாய் கரண களேபரங்களை (கர்மேந்திரிய-ஞனேந்திரியங்களுக்கு ஆஸ்பதமான சரீரத்தை) அளிக்கப் பெற்றவர்களாய்ப் பிறக்கிறோம்.
அப்படிப் பிறந்த நாம் நல்லது தீயது அறிந்து கரைமரம் சேர வேதங்கள் 4 அங்கங்கள் 6
உபாங்கங்கள் 4 ஆக சதுர்த் தச வித்யா ஸ்தானங்களையும், மநு ஸ்ம்ருதி இத்யாதி பிரமாணங்களை உபகரித்தவனாய் அக்ஞானமாகிற அந்தகாரத்தை விலக்கு முகமாக நம்மில் ஞானவிளக்கை ஏற்றி
பகவந்விமுகராய் புபுக்ஷுக் களாய் திரிகிற நம்மை உத்தரிக்க வேண்டி தானே அவதரித்து செய்த ஆனைத்தொழில்கள் போக
ஆழ்வார் ஆசிரியர்களையும் பிறப்பித்து, கொம்பு வைத்து மானைப்பிடிப்பாரைப் போலே எதிர்சூழல் புக்கு ரக்ஷணத்திலே உத்யோகிக்கிற மாலின் கருணை அளப்பரியது.
"வாரிக்கொண்டு விழுங்குவன் காணில் என்னை முன்னம் பாரித்து முற்றப் பருகும்" என்கிற நம்மாழ்வார் திருவாய்மொழி இங்கு விவக்ஷிதமாய் , நாம் ஒன்று செய்து அவனை அடைய போவதுண்டே? அவனுடய கிருஷி பலத்தால் அல்லது அது நமக்கு ஆகாதென்பதை அறிவிக்கவே இப்பாசுரம் பிறந்தது.
ஜன்ம கர்மச மே திவ்யம் :

தானும் பிறந்து அருள்மொழி யாம்கீதை
தானும் பிறந்து இனிநாமும் -- ஏனாம்
பிறந்தோம் எனஆழ்வார் தொட்டுநம் சீயர்
திருத்தப் பிறந்தார்கா ணே!
பாபாநாம் வா சுபாநாம் வா
நல்வினை தீவினை யாவும் அவரவர்
சேமவினை பாப வினைஎன -- மல்குமவைத்
தூய்ப்பச் செய்வதூம்மால் அன்பு மனம்மகிழ்தல்
கைப்பதாய் கோணல் பொருட்டு!
200. நரகாந்தகன் :
முரன்நர காசுரன் யார்எதிர்ந்தால் என்ன?
சுரன்வரம் காசுக்கு ஆகுமோ? -- கூறுதிறல்
சக்கரம் மிக்குளதாய் நீறுசெய் நேமியான்
ஒக்குமோ? வெல்பகை வீழ்த்து
எது தருமம் :

தன்நலம் தேடா தருமம் பலர்க்கும்
நன்நலம் மாட்டாம் தருமமென்றும் -- இன்பம்
பயற்றும்! தனக்குடைத் தாம்தருமம் தாழா
முயற்றல் அஃதுள் தலை!

மாருதி :
காற்றில் மனதின் கடியன்! புகழில்
மாற்றில் நெடியன்! மாருதிதன் -- ஆற்றல் கூற்றில் அடங்கா வற்று இராமதாசன் போற்றில் புலனாள்வர் கற்று!

நாரஸிம்ஹ வபுஹு :

அன்னையாய் அத்தனாய் அன்பளாய் நண்பனாய்
முன்னையாய் பின்னையாய் என்றுமே -- என்னையாள் தெய்வமாய் தேவனாய் உய்யு முபாயமாய் ஐயன்மால் ஆளரியா னே!

தீபாவளித் திருநாள் :

கேசவா! என்ன மனத்தூசு முற்றவும்
நாசமான வாற்றை எளியேன்யான் -- பேசவா?
தேசுடைத் தீபாவளித் தெய்வத் திருநாளில்
மாசனைத்தும் பொசிந்த தொத்து!

அநத்தன் அவதார பிரயோஜனம் :
விண்ணின்கண் பன்னகனாய் பண்ணும் பணிவிடை
ஒன்றும் குறையாமே மண்ணின்கண் -- தோன்றி அறுசமய போக்கை திருமாலுக் காக்கி நெறிசெய் வனிருபாடு ஈண்டு!

பகவத் கீதா கிஞ்சிது கீதா :
அவன்வாய் மொழிந்த அறுமூன்றன் நோக்கு
அவன்தாள் அடைகையாம்! கர்மத் -- தவபோத ஞான முதிர்உண்டால் பக்திப் பயனதாய் தானேதன் தாள்காட்டக் கிடைத்து!

வைகுண்ட மணிமண்டப மார்க்கதாயி :
ஈயாத இன்னருள் ஒன்றால் திருமாலும்
ஈயாத வானுலகை உள்ளங்கை -- காயது
போலா நமக்கது ஈட்டும் எதிராசர்
கோலுவார் கையிற் கனி.
பகவத் பாததாரா திருமஞ்சனம் :
கங்கையை தம்தலையில் தாங்கிய சங்கரனோ?
தொங்கல் துளப வழகுதோள் -- சுந்தரரோ?
இந்தநும் நீராட்ட கோலம்தான் மாமுனியே! (எம்)
புந்தியில் நின்றகலா வே!
மாமுநி திருமேனி வைபவம் :
அழகுக்கு யாரே அணைஎழக் கட்டுவார்?
ஆழிக்கு யார்அணை கூட்டுவார்? -- வாழி 
எம்மண வாளமுநி! நும்அழ கீதுவாழ்த்தல்  
எம்பணி எம்மாணி யாம்?

210. கண்ணன் காமம் :
கண்ணனைக் கற்றாரே காமுறுவர்! காயாம்பூ
வண்ணனை காணில் அகமகிழவார்! -- எண்ணம்
அகலா வழிநினைவார்! காணாக்கண் இட்டு
உகப்பார்! தரியார் பரிவு!

பரமபத ஸோபாநம் :
தனதான் அவித்து உயிர்கூட்ட மற்றபற்று
தானேதான் வீயும்! இறைப்பற்று -- தானும்
அடியார்கள் ஈட்டமும் எட்டெழுத்தில் மூட்ட
அடைவார் அவர்தொண்டாள் பேறு!
அருளப்பாடு மாமுநிக்கு :
ஞானமாகி ஞாயிறாகி நின்றவெந்தை யார்கோவே!
ஞாலமேகி நாளுமேற்ற மாலடியார் --   ஞாதியாகி 
நின்றஎம் தேவதேவே ! அந்தமில் உன்சிந்தை 
ஒன்றால் அளியனென நோக்(கே) கு !

தமிழ் மறையும்-வானுரையும் :

அந்தமில் ஆழ்வார் புகழ்தான் அகிலத்தே 
குந்தாது ஆளஅவர் வாய்மொழிக்கு -- ஈந்த
உரைதொகுப்பாம் ஈடுதனை நாடறிய நீடி
முறைசெய்த மாமுநியே ஏற்று!

சுந்தரவரனும்-வரவர முனியும் :

அரங்கன்! அழகாய் அனந்தன்மேல் மன்னு
துரகன்! தொண்டர் குழாமாய்ப் -- பரவும்
விரகன்! மணவாள மாமுநி போற்று
பரமன்! அணைவார் துணை!

பட்சி ராஜனும்-அதன் உச்சி மேலானும்:

புள்ளூர்தி! புட்பாகன்! புட்கொடியான்! போர்ஞான்று
பல்பகைவர் நேர்நில்லா வெல்வலத்த -- ஒள்வாள்
உரத்தன்ன வெஞ்சிறகோன் தாமுடையான் அத்தால்
பரதத்வம் மாலல்லால் மற்றோ?

நாலுமாறும் அறிவித்தல் :
நாலும் இருபதும் ஆயஎன் மேனிபால்
நாளும் விருந்தாய்த் திரிந்தேன்!உன் -- தாளும்
அருளும் தருமேல் திருமா மகள்சேர்
இறைவா! குறையில் பிறப்பு!
அரவரசுப் பணியரசு :
விண்ணரசு அப்பணை தப்பாது கீழிறங்கி
மண்ணரசு தன்னில் மனிசருய்யப் -- பண்ணி
அரவரசு அத்தால் இருபாடு போந்துசெய்
பேரரசு மாலின் பெரிது!
கரும்பு தின்ன கூலி :
சுவையன்! திருவின் மணாளன் ! அடிமுதல்
மேவி முடிபட மேலை -- அவயவம் ஒன்றொன்றும் நின்று பருகுவார் கன்னலை முன்னிருந்து பின்சுவைப்பார் ஒத்து!
கோப ஜென்மத்தை ஆவிஷ்கரிக்கை :
கோகுல கோநந்தக் குட்டனென் மென்மனதை
ஆகுலம் செய்துவிட்டான்! கன்றுகள் -- மேய்குலம்
ஆங்கு பிறப்பதாயின் கண்ணன் உடல்பட
ஆங்கு இருத்தல் பிடித்து!
சீட்டு பெற வீடு பயன் :

பிரமன் வளர்தரு ஓமத் தினுச்சிப்
பிறந்தாய்! போற்றுவார் நெஞ்சம் -- இருப்பவர்
தூமனம்தான் அத்திகிரி என்றே குறுகலும்எம்
மாமுனிக் கீந்த வரம்.
221. எனைச் சூழ உளானே :
மனம்எனும்ஓர் மன்றில் இடம்பிடிக்க இன்நாள்
மனைபுகுந்து ஆங்கு அனைவர் -- பனித்தகண்கள்
ஊடு நிறைவாம் இனம்புரியா இன்பம்
நாடு திருவாளர் கூடு !
ஆயி ஜனன்யாசர் :
ஆசை யுடன்அமுது ஊட்டிய அவ்அம்மை
அசோதையோ? அன்றி அயோத்திமன் -- கோசலையோ?
அன்புச் சபரி இவரோதான் ஆயிஎன
பின்பு பிறந்தாராய்க் காண்!
மோக்ஷமிச்சேத் ஜனார்த்தன :
தண்டை தவழ்கா லினன்!தாண் டவக்கோன்
மண்டை மதிசிவனும் மால்காலில் -- அண்டி
அவனிகறந் தாளுவான்! அந்த கழலில்
எவர்வீழு வாரவர் வாழ்ந்து!
ஐந்தும் அவன்போல் ஒன்று :
துரும்பினால் துற்றக் கிளறினும் கைமுன்
அரும்பு நகத்தால் அகலினும் -- கூரம்பு
குத்தி உதைசார்ங்க மேலும்மால் கைஆழி
ஒத்துசக்ர பாணியா னே !
மகள் பேச்சு :
ஆழ்வார்கள் தன்நிலைபோய் பெண்நிலையாய் பேசலும்
வாழ்வாக தன்னைக் கொடத்தாழ்த்துப் -- பாழ்த்தனாய்
நோயும் புயலமையும் தந்த திருமாலால்
மாயுவகை கூடா திடர்த்து.

அல்லதல்ல அவனுரு :
பிரமம் அருவம்  உருவமென வாதிப்பார் 
கூறும் மதிவிகற்பத் தோடாம்  -- மருளும்,  
அறநூல் புறம்பாம் உபாயமும் தள்ளி 
மறைநூல் திறத்தாவார் கொள்ளு!

பொய்கை ஆழ்வார் :
பொய்கைத் தடமதில் பூவென வந்ததால் 
வெய்யோன் விளக்கதால் தான்மலர்ந்து -- வையத்து 
மானிடர் பொய்மதிபோய் மெய்மதி பூணிட
தானெடுத்தார் தெய்வ விளக்கு!

நாரீணாம் உத்தமையோபாதி :
ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன
மாணப் பெரியனாம் மாலின்முன் -- நாணப்
பெரியநாம் எல்லாம் அவனைப் பாணி
கிரணம்செய் பெண்ணின் தகைத்து!

திருவரங்கன் உலா :
அம்புயை கோன்அரங்கத் தாள்கை விரும்பாத
வம்புகூர் தாணை தளபதி -- நம்புவகை
கல்சுவர் இட்டு அரங்கனைப் பூட்டிநம்
செல்வனாம் நம்பெருமாள் காத்து!
அம்பொன் அரங்கர் பவனியாய் சூழெதிரி
துன்பம் தவிர்ப்ப மலையாள -- தென்திசை
மேவித் திரிந்து வரநம் பெருமாள் 
இவர்எனஓர் வெள்ளான்பேர் இட்டு! 
231. ஈடு பெருக்கர் :
தலைவர்த் தலைவன்நம் மாமுனியைக் கூவி,திரு 
மாலேதம்  முன்நிறுத்தி ஓராண்டு -- காலையும் 
மாலையும் ஆழ்வார்தம் தூமொழித் தீம்பொருளை  
ஓலையின் கூறல் பணித்து!

பரமாத்மாநியோர் ரக்த: விரக்த: அபரமாத்மநி 

சுகம்விரும்பி சோம்பல்தான் ஏட்டுச் சுரைக்காய்போல் 
பாகவறை கூட்டுக்கு ஆகாது -- மோகம் 
முடித்துநம் கண்ணனைக் கூடுமத் தாகம் 
கிடைக்க மற்றபற்று முற்று!

பேரருளாளன் பெரும்தவி :
மணங்கமழ் மல்லிகை சம்பங்கி தாழ
அணங்கிவள் மால்பெரும் தேவி! -- குணங்கமழ்
பூவகை சேர்திகழ் தாயவள் தூய்த்தடம்
மேவுவார் நாடலாம் வீடு!

புறவிருள் மாந்தும் இரவி :
பொய்கைத் தடமதில் பூவென வந்ததால்
வெய்யோன் விளக்கதால் தான்மலர்ந்து -- வையத்து
மானிடர் பொய்மதிபோய் மெய்மதி பூணிட
தானெடுத்தார் தெய்வ விளக்கு!
அகவிருள் நீத்தும் அறிவு :
இதயத் துதவிஅன்றேல் உண்டோ பரமன் 
துதிசெய் அறிவுமே ? உண்டு --  இதுஎன  
ஏதுவாய் ''சத்தை'' கொள,மாயும் உள்ளிருள்    
பூதம்செய் ஞான விளக்கு!

அறிவின் முழு உருவே இறை :

அண்டமுண்ட கானிருள் நீங்கலும் தம்முள்ளம் 
மண்டியுண்ட பொய்ஞான மெய்யிருள் -- விண்டுகொண்ட 
துண்டிண்டை! மற்றைமெய் ஞான புலர்வாழ்வார் 
கண்டுகொண்ட கண்ணண்மால் என்று! 
ஈஸ்வராய நிவேதித்தும் :
எண்பகர் பூவும் பழமும் கொணர்ந்துமே 
மண்பகர் மாலின் மதிவாணர் -- பண்பகர் 
நால்தமிழ் வேதம் இசைப்பத் துதிப்பதோர் 
சால்புடை தொண்டர் பரவு! 
தூது மொழிக் குழலோன் :

குழலூதும் கண்ணன்!நம் கோகுலத்து மன்னன்! பழமறையின் உச்சியான் ! பண்பில் -- பழக இனிய பரமன்! அவன்பாதம் நம்பிப் பணிய வருவான் துணை!
பிராணாதார்த்தி ஹரன் :

அடியார் அழைகுரல் தாழாது சூழ்வனாய் 
நாடி வருவார்தம் வேட்கை -- முடிப்பான்!
கொடையான்நம் அத்தி கிரிவரதன் அன்றி 
கொடையான் எவரும் உளர்?

சிஷ்யஸ்தே ஹம் சாதிமாம் பிரபும் :

வடுகனைக்  கூவியவர் வாரா தொழியவே 
நெடுகன் வடுகன் எனவாய்  -- உடன்நடந்த 
நம்பிக்குச் சீசூர்ண மீந்த எதிராசர் 
தம்மின்நற் சீடனாம் மால்!

241. நம்பிபோல் தானும்முன் சாந்தீ பினிபால்தான் 
கூம்பிநேர் நிற்றுக் கற்றகல்வி -- ஓம்பி  
சிறப்பிலாது மாமுனிகள் தாள்தாழ்த்துப் பெற்றான் 
அரங்கனுமே ஈடு பெருக்கு !

மிதுன போக்யத்வம் :

மால்விட்டு அம்மால் மனையாளைக் காமுற்று 
கால்கட்டு வான்தலை பத்தும்போம்! -- நூலாட்டி 
கேள்வனை மாஅவள் விட்டு அணைவாளை 
வாள்தொட்டு காதுமூக்கும் போக்கு! 

இராக்கதன் தம்பிநல் வீடணன் அண்ணல் 
இராமனை நண்ணியே நாடுநலம் -- கோராமல் 
பெற்றதூம் சீதை அருள்வாய்  வருதலால்!
அற்றதுற்றார் வீடாள்வர் நோற்று!

கண்ணன் கழலிணை :

தன்னடியாள் தாழ்கூந்தல் மேன்முடிய தான்தூது 
பொன்னடி கொண்டேகி போர்முகத்தான் -- மன்னர் 
பலர்மாளத் தேரூர்ந்த கண்ணன் கமல  
மலர்ப்பாதம் நண்ணுவார்நம் கோ!

திருத்தண்கா :

எண்ணில் வருவான்! எண்ணத் தமர்வான்!எம் 
பண்ணில் இசையில்ஒண் பாட்டில்மால் -- திண்ணம்  
வருவான்! திருத்தண்கா ஊரான் விருத்தம் 
பெரிய திருமால் உகந்து!

பசுர் மனுஷ்யப் பக்ஷி  வா :

பசுபட்சி மானுடர் யாவரேனும் தெய்வ 
வசப்பட்டார் நன்நோக்கு வைகுந்தத் -- ஒசியும்!
இயல்பாய் இராமன் சடாயுவுக்கு அன்று 
உயர்ந்ததன் வீடுநல்கல் போன்று !

வித்யாம் தேஹி :
கல்விக் கிறையாம் கமலமலர்க் கண்ணன்மால் 
சொல்லில் பொருளில் சுவைப்பாட்டில் -- நில்லும் 
படியெனக் இப்போ தருள்கண்டாய் என்பன் 
அடியேன் பரிமுகத்தான் நோற்று!

மன்நாதன் :

நச்சுவார் உள்ளத்துப் விச்சையான்! ஆங்கவனை 
நிச்சலும் இச்சித்து மெச்சுவார் -- பிச்சியான்!
நான்மறையின் உச்சியான்! என்அரங்கர் என்மாட்டு 
தான்விரைந்து காட்டும் உணர்வு!

கோவிந்த பட்டாபிஷேகம் : 
மழைபொழிவான் வான்பசியை தான்கெடுத்து மேன்புசிவான்
ஏழை அவர்கிட்ட இன்னடிசில்! -- மோழை 
எழுவித் தவன்தாழ வந்து இரைஞ்சி
தொழலுற்று நிற்றான் மலை!

250. அண்டங்கள் அந்தரத்தில் நிற்பதாய்ச் செய்வான், பூ
மண்டலத்தில் ஓர்மலையை கோகுலத்தில் --  கிண்டி
கவிழ்த்தெடுத்தான் என்னல் பொருட்டோ?பூ வைத்தாங்க
தவத்தொத்த உஞ்ஞற்றல் ஏன் ?

இராமாநுச தரிசனம் :

தீதில்சீர் நன்நெறி தேவன் திருமால்பேர் 
ஓதும் பெரியோர் பெருமான் -- எதிராசர் 
வேத நெறிசேர்அச் சாதுவாழ் சாதியொன்றே 
கோதில் சமயத் துலகு !

தல வழிபாடு :

கிருகத்தாம் அர்ச்சை இருக்க பிறகு 
திருக்கோயில் ஏதுக்கு என்றால் -- திரைக்குப்பின் 
போகம் மனையில் சமபந்தி போகம்போல் ஆலயம் 
ஆகும் தனித்தேட்டம் தாழ்த்து!

மிருத சஞ்ஜீவினி :

இராம இராம இராம அதனினோர்
சேமநல் வீடு கனியுமின் -- நாமம்
உளதென் றிருப்பார் தமில்கூட்ட னல்லேனாய்
இளம்பிறை சேர்முடியான் கூற்று!

உபய வரதன் :

அணிசேர் மணியே! மணிவண்ணர் நீரே!
பிணிசேர் பிறவி கெடுப்பான் -- துணிந்து 
பதினெட்டின் பால்மூவா றின்பொருளை ஆய்ந்துரைக்கப் 
போதலோகா சாரியனாம் மிக்கு!

ஸத் சங்கத்தவம் :

பெரியார்க்கு ஆட்பட்டால் பொய்யாது பேறு
சிறியார்கள் நட்பு சிறுமை -- திறத்தாய்
நெறிநீக்கி கீழ்மை புகுத்தும் அதுவால்
சேறும் இடம்தேர்ந் துயர்ந்து !

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம்:

கோளூர் அகத்துபெண் பிள்ளை விடைகொள
ஆளும் அடியார் புடைசூழ -- கோளூர்
திசைசேர் உடையவர் கண்டவள் பேசிய
வாசகத்து நிற்ப விசும்பு!

பிரகாரி ப்ரஹ்மம் :

தெய்வம் உள்ளதென்று காண்டு உணர்தலில் 
தெய்வம் அல்லதென்று ஆமோதான்? -- தெய்வம் 
திருமால் உருவாம் உலகும் உயிரும் 
இருப்பநும் காணாக்கண் ஏன்?

துஷ்ட ஜன நிவர்த்தகன் :

நாதனே! நம்பி நரசிங்கா! நானுனை 
போதினைக் கொண்டு புனைந்திலேன்! -- வேதநெறி 
யாதிலும் நின்று ஒழுகிலேன்! ஆகிலும் 
மாதவா! நீஎனை காத்து?

மைய்ய கண்ணள்தன் செய்ய கண்ணன் :

நீலோத் பலம்நிற்ற பொய்கைதன் மெய்யழகு 
மாலோலன் தேவிசெய்ய கண்ணிணை -- போலாவோ?
ஆலின் இலைமேலோன் கண்கள் அலைவாய்
இலையேவோ? யான்ஏ துரை

போக ஜகந்நாதன் :

இலைபூ கனியருந்து நீர்இவை நாலில் 
இலைகடை யாதல் முதலாய் -- விலைபோதல் 
அன்று சகந்நாதன் தின்றுமகிழ் வெற்றிலை 
ஒன்றதால் கீதையான் வாக்கு!

261. நீத்தார் கடன் :

பாகல் பிரண்டை பலா இவைமூன்றும்
ஆகும் மரித்தார் திவசத்து -- போகத்
தடிசில் ! அவைசமைத் ஈவார் படையல்
தொகைஆ யிரமாம் கணக்கு!
வியாச சூத்ர பொக்கிஷம் - ஸ்ரீபாஷ்யம் :
சுருங்க உரைத்தால் அதுசூத் திரமாம்!
அரும்பொருள் அஃதுள் விளங்கப் -- பெறாது 
திரிய உரைப்பன நீத்து உரிய 
புரிதலே ஸ்ரீபாஷ்யம் ஆய்த்து!
ஆனை ஏறும் ஆனை :
மடுவிலானை காக்க போதசக்ரத் தானை!
அடுதயானை கொம்புகொண்ட உம்பரானை! -- வீடதனை
நீடுமானை! நம்கச்சிக் கீசன் அமர்ந்துஏசல்
நீடுமானை! நம்பல் நினை.

அறுபதும் கடந்த அந்நாள் :
அறுபதும் நிற்கக் கடந்துபோம்! நாரணன் 
பேறு நமக்காகு மேல்!இனிக் -- கூறல் 
அவன்பேராய் நாடல் அவனூர் அதுபோல் 
தவம்நேரும் மாலடியார்க் கென்று!.


எதிராசர் உய்யாலி  :
மடுக்கரை மாடுநீடு ஓடிவந்த மாலோ?
அடுதவன் தூண்இடைக் கூடலவன் -- பாடு     
பெரிதோ? அடியார் புடைசூழ் எதிராசர் 
நேரில் வரும்இப்பா ரிப்பு?

ஏதிலார் காப்பு :
வைகுந்தம் நேர்புக ஒர்வழி யானறியேன்!
செய்கின்ற தாம்கிரியை தாமறியேன்! -- உய்கின்ற 
தய்ய!யான் எஃதுகொண்டு என்ன எதிராசர் 
துய்யதாள் அஃதுகண்டு கொண்டு!
267. ''என் நெஞ்சினார் வஞ்சத் தூது "

காற்றினோடு பைங்கிளி பூம்புட்டில் வண்டிவைஎன் 
ஆற்றாமை சென்றுரைய நின்றிருக்க -- நோற்றஎன்
நெஞ்சினை தூதுசெல யான்மொழிதும் வாஞ்சையால் 
விஞ்சிச் செருக்கலதாய்க் கொண்டு!

அங்கு அரங்கனார் முன்நிற்று யான்மொழித 
வாங்கு சென்றுரையாய் நன்நெஞ்சே! -- நிங்கண் 
அச்சம் பயம்பசப்பு நீயலயே! என்நிலைமை 
எச்சப் படாது இயம்பு!

போந்தலும் நின்பால் அரங்கனும் ஆதாரம் 
ஈந்தனாய் நீமயங்கி உன்னையும் -- போந்தஎன் 
தூதும் மறந்து தடுமாறி தத்தளித்து 
யாதுமுரை யாதொழிவை கொல்?

அஃதுசெயா தென்பால் கழிவிரக்கம் நீகாட்டே!
பக்தி வயப்பட்டார் காதன்மை -- எஃது
இடர்க்கும் என்பதூம் உன்னால் இயம்ப 
இடர்ப்பார்க் கிரக்கம்எங் குற்று? 

271. தூயஎன் நன்நெஞ்சே! தூது மொழிவதாய் 
போயபின் தூயஎன் உள்ளம் -- அயர்க்கா
வகைதூய என்மொழி வாயது கூறுமேல் 
ஈகை நும்வழிநம் பேறு! 

அங்குற்ற உன்னை அரங்கனார்! வஞ்சியாதன் 
சங்குற்ற மென்துளை அம்பவளம் -- தங்குற்ற 
செங்கமலப் பூவதரம் கிங்கிணித்து செப்புமதை 
இங்குற் றியம்பாய் உடன்!

எம்நோய் உமக்கலாது நெஞ்சே ! நிமிர்த்துப்போய் 
'எம்மோய்! நுமர்உகந்தாள் நீள்காதல் -- அம்ம! 
பழியாய் ஒழியாமுன் சேரவிழை யீரென்'
மொழியுமேல் வாழி!என் உயிர்! 

இஞான்று நீஎமக்காய் செல்தூது உள்ளமே!
எஞான்றும் யான்மறவேன்! என்றேர்க்கு -- அஞான்று
மால்அரங்கர் பால்சென்ற என்நெஞ்சு இன்றும்என்  
பால்திரும்பா தங்கே முயங்கு!

ஸாபேக்க்ஷா உபாயத்வம் நிரபேக்க்ஷா உபேயத்வம்.

மின்னுமா மூரிநீர் மேகவண்ணா! என்பொருட்டு 
அன்னையர் நின்னபயம் நேர்ந்திட்ட  -- தன்றியும்யான் 
உன்னதாள் பற்றலும் ஏற்புடைத்தாய் மால்நீயே    
என்னையும் காத்தல் கடன்.

நீராட்டம் :

தூய்மொழி வேதமும் கோதிலவாம் ஆழ்வார்கள்
வாய்மொழியும் வாழ்த்தும் புனிதமாட்டி -- மெய்மொழியார்
பல்லாண்டு துய்ப்பினும் இத்தொட்டி நீராட்டம்
அல்லதேல் மாடலமா லுக்கு!

கிருபாமாத்ரப் பிரஸன்னர் :

வாய்க்கொண்டு வாழ்த்தும் வகைஅறியேன் இப்பிறவி 
நோய்க்கொண்ட இந்நர ஜென்மம் யான் -- மாய்த்தற்காம்
வாய்பறியா அந்நாளில் சேய்குத்தாய் போலவே 
வாய்க்கும் குருஅவரே சூழ்த்து!

கண்டுகொண்டேன் காக்கும் இறைகண்ணன் கேசவன் 
வண்ண மழகிய திண்கழல் -- நண்ணல் 
விழைவார்க்கு அவ்வெண்ணம் திண்ணியதாய்க் கூட
அழைத்துவாழ் விக்கும் குரு!

மோக்ஷமிச்சேத் ஜனார்த்தன:

மலர்மகள் மண்மகள் ஆய்மகள் மூவர்
அலர்மிகு மார்பில் அழகாய் -- இலகும்
வரதநீ நீடு தருகை அபயமாய்
மாரிலும் மாற்றமில் பேறு.
இங்குற்றை வாசம் உத்தேஸ்யம் :
பாற்கடல் நின்றும் இழிந்து பாரின்மேல் 
நூற்பிடம் வான்வட தேசமேலும்  -- நோற்பிடம்
ஆழ்வார்தம் ஈரத் தமிழ்ப்பா பிறப்பிடம் 
சூழ்த்ததாம் நம்தமிழ் நாடு!

நீத்தலும் (தியாகமும்), விடுகையும் (ஸந்யாசமும்) :

வினைப்பயன் நீத்து, நினைப்பு எவன்செய் 
வினைப்பயன் நீடுவார் தம்சீர் -- தனை,மேன் 
வினைப்பயன் கூடா வகையே! முத்தி 
தனின்பயன் கூடும் தகை!

281. வெண்ணையூண் மருந்து :

வயிறு துலங்க விளக்கெண்ணை போலே 
உயிரும் உலகும் உள்ளே -- வயிற்றிட்ட 
மிச்சல் வெளிப்பட இச்சித்து வெண்ணையூண் 
நிச்சித்தான் நோய்தீர் மருந்து!

பொறை தீர்ந்த நன்மை பயத்தலால் :

நன்மையும் தீமையும் சேமலாபம் என்னலாய் 
உன்னி விழைவர் உளராவார்  -- அன்னியும் 
மன்னி உழையார் அவர்கூறு காரணம் 
பன்னி உரைப்பபாபம்  ஆம். 

இந்திரியாணி ஹயாஹுஹு  :

புலனைந்தும் பூட்டிய தேரின் குதிரை 
அலமந்து ஓயாதே நம்மின் -- நலத்துவை 
சாரதியாம் கண்ணன்கை மாட்டு மனமதை 
சேர்விப்பார் சேரும் நிலை.

அடியார் அடி முடியேன் :

ஒன்னான நம்முதலி யாண்டான் குருவரியர் 
தன்னின் திருத்தாள் அடைவதில் -- மன்னி 
மனம்வைப்பார் தானத்து எம்தலை தாழ்த்து  
தினம்வைக்கும் என்இத யத்து!

நோற்பார் தோற்பானை :

தோற்றோம் எனலாற்றா மற்றையார் முற்றலானை! 
ஆற்றோம் உனைவிட் டினியென்று -- நோற்பார்முன்    
தோற்பானைப் பெற்று இனிப்போக் குவனோதான்?
கற்றனைத் தூரும் அவன்!

ஹிருதயக் கிரந்தி :

மண்ணில் மனையில் பெறும்மக்கள் பொன்பொருளில் 
எண்ணம் பிணைந்து இனிஏது -- பண்ணல் 
உள்ளதென்று கண்ணன் மறப்பார் இதயத்துள்  
பள்ளம்தான் அல்லிருக்கும் இல்

அற்றதன் பற்று வீடு  :

மற்றத்தின் பற்று விடுத்துப்பின் என்னைநீ 
பற்று எனகண்ணன் கீதையின் -- கூற்றதேனும்
பற்றுவித்து யாம்விடு விபவன் தானாக 
கற்றுவித்த வன்கழல் கூடு!

நாமியும் நாமாவும் :

நன்மையால் நாரணனை என்றும் நினைக்கிலேன் !
புன்மையாம் ஒன்றும் அகன்றிலேன்! -- என்றாலும் 
உய்வுண்டாம் அம்மால்தன் செந்நாமம் ஒன்றேனும் 
வாய்க்கொண்டு சொல்லிய ஆங்கு!


பிறவி நோய் மருத்து :

தாள்சேர்ந்தார் மீள்வதில்லை மண்ணுலகில்! ஏதுகுறை
வள்ளுகிரால் பொன்னன் அகல்மார்வம் -- அள்ளல்
விளைத்தானை விள்ளாதே உள்ளத்து வைப்பார்
இளையார் பிறவியுள் புக்கு!


அப்போதைக்கு இப்போது :

முப்போதும் மாலவன் தாள்நினைந்து பூச்செறிந்து 
இப்போது நாக்கொண் டவன்நாமம் -- செப்புமினே !
முப்பொறியும் மூத்திளைத்து அவனடியை ஏத்தலாகா 
அப்போது ஆவன்நம் காப்பு!

291. விஷ்ணு போதம் :

குருவே துணையா அவர்கை துடுப்பு 
அருள்கை உருவாம் திருவே -- பெறுமேல் 
திருமால் திருவடி ஓடம் துறைபோம்  
பெருமா பிறவி முடித்து!

சங்கு சுட்டாலும் வெண்மைத்தே :

சங்குதான் சுட்டாலும் வெண்மை தரும்,தோளில் 
தங்குதம் முப்புரிநூல் கெட்டாலும் -- ஆங்கவர் 
வைதிகரே! நம்வரதன் நீடல் தொழிலாக   
கைஅபயம் காட்டுமாகில் என்?

ஏரிசெய் மாரிபோல் அவன் :

புத்தி அகலாக பக்தியும்  நெய்யாக 
முக்திபெற இச்சை இடுதிரியாம்  -- யுக்தி 
அறிவார்யார் அன்னவர்க்கு தீபத்துள் நின்று 
ஏரிசெய்வார் மாரி  அவன்.    

புத்தி அகலாக பக்தியும்  நெய்யாக 
முக்திபெற இச்சை இடுதிரியாம்  -- யுக்தி 
எவர்கொளுவார் அன்னவர்க்கு தீபத்துள் நின்று 
அவன்நோற்பான் நம்பால் தவம்!

பக்தானாம் துவம் பிரகாஸசே :  

நமக்கின்னா செய்ப்பவர்க்கு நம்பெருமாள் விம்மி
அவர்கின்னா செய்வான் எனவால் -- நமர்க்கன்னார்
செல்தீங்கு நாமெண்ணல் உண்டோ? கூரேசர்
போல்பகைவர் பால்இரங்காய் நெஞ்சு!
நமக்கின்னா செய்ப்பவர்க்கு - 'உண்ணும் சோறு, பருக்கு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்', 'கிருஷ்ண நாதா: கிருஷ்ணாஸ்ரயா: ஸ்ரீ கிருஷ்ணப் பிராணா:' என்று இருக்கிற ஆழ்வார் போல்வார்களை அவலம்பித்திருக்கிற அஸ்மாதாதிகள் விஷயத்தில் அசக்ய பாவத்தோடே காரணமின்றி துவேஷத்தோடே இருப்பவர் பக்கல் ;
நம்பெருமாள் - 'ஸகிருத் ஏவ பிரபந்நாயா தவாஸ்மி இதீச யாசதே , அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம' என்று ஒருமுறை காலில் விழுந்தவர் விஷயத்தில் பூத, பௌதிக, தெய்வாதிகளால் வரும் எந்த ஒரு ஆபத்தையும் போக்குகிற அவகாச நிரீக்ஷிதனாய் இரண்டாற்றின் நடுவிலே இருக்கிற நம்பெருமாள் ;
விம்மி அவர்கின்னா செய்வன் - பிரஹ்லாதனுக்காக வந்த ஒரு நரசிம்மனாக, தன்னை வீழ்த்த முடியாது தவித்த இராவணன், தன்னை யுத்தகளத்தில் சுமந்து நின்ற ஹனுமான் மேல் சரவர்ஷம் வர்ஷிக்க, 'கோபஸ்ய வசமே இவ ' என்று கோபத்துக்கு அருளப்பாடு இட்ட இராமனாக , தனக்கு ஒருவரும் விரோதி இல்லை ஆயினும், தன்அடியார் விரோதிகளை தன்விரோதியாகக் கொண்டு பொங்கி புறப்படுதாலிகிற 
எனவால் - ரக்ஷணத்தை நிரீக்ஷித்தவனாய் அவ்வெம்பெருமான் இருக்க 
நமர்கன்னார் செல் தீங்கு - எமன்வாயில் அந்த நம்முடைய விரோதிகள் விழவேண்டும் என்று 
நாமெண்ணல் உண்டோ - ஆசௌசமான அந்த தாழ்ந்த எண்ணத்தை ஏறிடுவார் அல்லவே? 
கூரேசர் போல் பகைவர்க்கு - பகவத் இராமாநுசர் மேல்நாட்டுக்கு எழுந்தருளவும், தன்னுடைய கண்கள் இரண்டும் போகவும் காரணமாக இருந்த நாலூரானுக்கும் வீடு பேற்றை விழைந்த கூராத்தாழ்வான் போல பகைவர்கள் இடத்திலும், தங்களுக்கு வரும் இன்னல்கள் தமக்கு கர்மாதீனமாக ஏற்பட்டது, எய்தவன் இருக்க அம்பை நோவான்என் என்கிற கணக்கிலே வசா, மனசா, கர்மணா ஒரு தீமையும் ஆஸாஸிக்காத சகஜ இரக்கத்தோடே வர்த்தித்தலாகிற ;
இரங்காய் நெஞ்சு! - 'அவர் நாண நன்நயம் செய்து விடல்' என்றாப் போலே, பொறையும், கிருபையும் கொள்வாய் - என்று தன் நெஞ்சுக்கு உபதேச மாக்குகிறர் இந்த ஸ்ரீசூக்தி யாலே. 
பொறையாவது - ஒன்று செய்தாற்கு இரண்டு விளைய மீதூறி நினையாமை. கிருபையாவது - பாகவதா பசாரமுகேண பகவன் நிக்ரஹத்துக்கு ஆளாகி, இவனுக்கு நரகம் சம்பவிக்குமே எனஇரக்க புத்தியோடாகல் உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம். இது எளிதில் வராது. எண்ணம் முயற்சியின் பால் இருக்கட்டும் என்று ஸ்வநியந்ரணா பிரயத்னமாக அவதரித்த பாசுரம் இது என்று கொள்க

மாலுள்ளாம் ஆலின் மேலிருந்தானே :
ஊழியான் தன்வயிற்று உள்அடங்கும் இவ்வுலகம்
ஊழியம் காலத்து உள்வாங்க -- சூழரன்
பின்னை விழுங்குவான் ஊறுகாயென ஏலுவான் 
அன்னவசத் தாலம் தளிர்.
பிரகாரதய அத்வீதீயம் பிரஹ்ம :
உணர்வில் உயிரில் உலகில் கலந்து 
பணைப்ப பிரமம் பலவின் -- கணக்காம்.
அனைத்தும் அவனின் உருவத் தொருபால் 
நினையினவன்  ஒன்றாம் முடிவு.

யாதிருச்சிக, ஆனுஷங்கிக, பிராசங்கிக ஸுக்ருதம் :

இச்சை உளவாக தன்தயையால், நேராத
விச்சை யவைஒன்று பத்தாக்கி -- அச்சோ!
இவன்ஈது செய்ததே பச்சையாய்க் கொண்டு
உவக்குமவன் அன்பே தலை!

ஈந்தவர் நோக வாய்க்கும் கொல்?
கண்ணனை யார்மறப்பார் ஈன்றதாயை தான்மறந்தார்;
எண்ணம் பிரிதின்பால் ஈந்தாரேல் -- புண்ணியம் 
கொண்டு பிறப்பித்த தந்தையை கொண்டாடா 
மண்டூகத் துண்டோ நுணல்?
300. துவாதச நாமம் :

-- கி. ஸ்ரீ. ஸ்ரீ.