Thursday, December 22, 2016

திருவஞ்சிக்களம் :

வஞ்சிக்களம் :

இருள்தருமா ஞாலத்து இகலொழித்தல் வேண்டுவயேல் 
மருளொழித்து மடநெஞ்சே வஞ்சிக் களத்துறையும்
அருளாழி மணிவண்ணர் கண்ணன் எம்பெருமான்
திருவாளன் திண்கழல் துணையாதல் தேடுவயே. 

தேட்டம் திருமால் தொண்டர்தம் கூட்டத்து ஈட்டம்
வாட்டமில் பெரியாற் றின்பால் வஞ்சிக் களமதன்மேல்
நாட்டம் நாளும் எனக்கு கொடுங்கலூர் மாதவன்
பாட்டாயா தமிழ்மாலை பாடிப் புகழ்வன் அவனையே .

மெய்யாம்  மறையை மறைவாழ் திருவை
செய்புரள் பெரியாற்றின் வடபால் வஞ்சிக்களம்
எய்திவைகும் மாதவன்தன் கோயில் நண்ணி  
உய்யகதி  ஓம்புவார் உற்றார் எனக்கவர்  ஆவரே .

ஊனேய் குதம்பைஉயிர் வாடவாடும்
வானேய் வண்கையார் வஞ்சிக்களத்து 
மானேய்மடப் பின்னைதன் மாதவற்கு
யானேகி ஓர்நாள் வினையாவும் ஓய்வனே.

தருவாய்நீ  மாவலி மூவடி என்றேகி
ஒருகால் காட்டி மறுகால் அளந்த
பெருமான் புகுதவிடம் திருவஞ் சிக்களம்
சிரமேலது செறிய மென்குழலாள் நோக்கு.

ஏர்முன் நடப்ப பார்பின் செல்லும்
வேர்முன் எழுமது இவ்வுலகில் தொட்டனைத்
தூரும் கழனிப் பழவயல்திரு வஞ்சிக்களம்
நேர்முன் நடப்பார் பாங்காய பத்தரே. 

ஆலின் மேலான் அலைகடல் துயின்றான்
பாலின் பிறந்த பதுமத்தாள் தாம்வரும்பும் 
நூலின் மேலோன் நுவன்றுறையும் வஞ்சிக்களம்
கோலிக் குறுகுவார் வானோர்நல் விருந்து.

மன்னன் குலசேகரன் நாளும் நினைந்து நைந்து
தென்னரங்கம் திசைநோக்கி நாடிமேவல் விழைவான்
என்னுடைய இன்னமுதர் காணலின்று நாளையாக
என்னோ? ஏழைக்கு இரங்கும் வஞ்சிக் களத்தானே.

விஞ்சை வானவர் தஞ்ச மானவன்
மஞ்சுமா மழைபொழி வஞ்சிக்களம்
கொஞ்சிப் பரவி கூத்தாடு மடியார்
நெஞ்சில் போதவன் வந்தமை ஏத்துவனே.

அங்கண் இரண்டும் அடியார்க்கு அருள்சேர்ப்ப
தெங்கும் பலவுதூங்கு தென்நாட்டு வஞ்சிக்களம்
பொங்கும் பரிவாலே மன்னியெங்கள் மாதவன்
செங்கோல் ஆட்சி செய்வனாம் அவிவின்றி.

வண்டமர் சோலை வளம்பொழில் நகரான் 
தொண்டன் குலசேகரன் தாம்வந்து தோன்றியஊர்
அண்ட வாணன் ஆள்கின்ற வஞ்சிக்களம்
கண்டேத்த வல்லார் தொண்டாள்வர் விண்ணூடே .

--கி.ஶ்ரீ. ஶ்ரீ.


Tuesday, December 13, 2016

கீதா வசனம்

உற்று மோந்து கண்டு கேட்டு சுவைத்து
பற்று விளைக்கும் ஐம்பலன் கண்ட இன்பம்
துற்ற மெய்மூக்கு கண்காது நாக்கிவை மேல்உயிர்
முற்ற உண்டாம் அவைவீயப் பெற்றவன் தாள்பற்று

(ஞாநேந்திரியம், கர்மேந்திரியம், மனம் இவைகளின் கூட்டறவே கிரியை. இந்த கிரியை பாபத்திலோ, புண்யத்திலோ சேர புத்தி காரணமாகிறது. புத்திதான் உயிரின் வெளிப்பாடு. அதன் நோக்கும், போக்கும் ஊழின் (முன்வினைப்) படி அமைந்தால் ஸ்வதந்ரியத்தின் - அஹங்காரத்தின் பரிணாமம். பகவத் அபிமுகராய் அவனின் ஆநுகூல்ய சங்கல்ப மடியாய் அமைந்தால் அது பிராதிகூல்ய வர்ஜனம். தளை நீங்கி தாள் சேர்க்கும்).